சௌந்தரராஜபெருமாள் கோவில் நாகப்பட்டினம்.

சௌந்தரராஜபெருமாள் கோவில் நாகப்பட்டினம்.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது.

108 திருப்பதிகளில் 19 ஆவது திவ்ய தேசமாக விளங்கும் இவ்வாலயம் நான்கு யுகங்களாக வணங்கப்படும் ஸ்தலம் என்ற பெருமைக்குரியது.



ஆலயத்தின் மூலவர்: நீலமேகப் பெருமாள். (நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்)

இன்று 07.10.2023 புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை கனிசமான கூட்டம். மூலவரை தரிசித்து வரும்பொழுது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

உற்சவர்:சௌந்தர்யராஜன்
தாயார்:சௌந்தர்யவல்லி
உற்சவர்தாயார்:கஜலஷ்மி
தீர்த்தம்:சாரபுஷ்கரிணி என்று அழைக்கப்படுகிறது.

இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன என்று குறிப்பிடுகிறது ஆலய நிர்வாகம்.

ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம் என கூறப்படுகிறது. ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியதாகவும் கூறப்படுகிறது.

திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலமாகும் இது என்று கூறுகிறார்கள் வைணவ குருமார்கள், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம் இது ஆகையால் இவ்வாலயத்தில் பெருமாளை தரிசிப்பது திருப்பதி சென்று வணங்கியதற்கு ஒப்பாகும் என்கிறார்கள்.

வைபவ சமயங்களில் வரிசை பிரகாரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கைங்கர்ய சபாக்காரர்களுக்கு தனிவரிசை. ரூ 10 கட்டணத்துடன் சிறப்பு தரிசன வரிசையும் உண்டு. பாகுபாடு போல் தெரிந்தாலும் பத்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த வேறு வழி இல்லை என்கிறது ஆலய நிர்வாகம்.

ஆலயம் உள்ளே தூய்மையாக உள்ளது. மூலவர் நின்ற கோலத்தில் காட்சி தரும் கருவறை வரை சென்று இறைவனை தரிசிக்கலாம். தீபாராதனை காட்டப்பட்டு அனைவருக்கும் தலவரலாறு கூறுவது சிறப்புக்குரியது. குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டும் தேங்காய்மூடி துளசி வழங்கி கெளரவிப்பதை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பக்தர்கள் நலன்கருதி ஆலயத்தை வலம்  வருபவர்களுக்கு மரப்பலகையில் வழித்தடம் அமைத்திருக்கிறார்கள்.

ஆலயம் பிரதான வீதியில் அமைந்துள்ளதால் வீதியில் கூட்டம் தெரிகிறது. காவல்துறை மற்றும் ஊர்காவல்படையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதால் பத்தர்கள் எளிதில் ஆலயத்தின் உள்ளே செல்லலாம்.

திருவாரூர் மற்றும் வேளாங்கண்ணி மார்க்கமாக வருபவர்கள் பெருமாள் கோவில் நிறுத்தத்தில் இறங்கி ஆலயத்தை அடையலாம்.
நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் திருவாரூர் அல்லது வேளாங்கண்ணி  மார்க்கத்தில் செல்லும் பேருந்தில் பயணித்து பெருமாள் கோவில் நிறுத்தத்தில் இறங்கி ஆலயத்தை அடையலாம்.

- வை மகேந்திரன்

Comments

Popular posts from this blog

கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?

கம்யூனிஸத்தில் ஜனநாயகமும் முதலாளித்துவமும் கைகோர்த்து விளங்கும் நாடு இது!