கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?
கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?
தொகுத்தெழுதியவர்: வை.மகேந்திரன்
இவர் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் என்பது அறிந்ததே.
கோரக்கர் யார்?
மனிதனாக பிறந்து தெய்வ சங்கல்பம் பெற்றாரா அல்லது தெய்வ பிறப்பாக ஜனனமாகி உருவகமானாரா.....
வாருங்கள் இக்கதையை படங்களுடன் வீடியோவாக MAHENDIRAN GLOBAL TV-யில் காண்போம்.
பிறப்பு இருவகை என்று வேதங்கள் கூறுகின்றன.
கருமத்தின் பயனாக கருவாக உருவாகி பரிணாமம் ஆவது ஒன்று. இப்புவியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அப்படி ஆனவை தான்.
இன்னொன்று,
சிவபெருமானின் ஆசியில் தெய்வப் பிறப்பாக உருவகம் ஆகி அமானுஷ்ய சக்திகள் பெற்று திகழ்வது.
கோரக்கர் தெய்வ பிறப்பாக, தெய்வத்தால் உருவாக்கப்பட்டவர்.
ஒரு முறை, சமுத்திரத்திற்கு அருகே சிவபெருமான் உமையாளுக்கு போதனை செய்துகொண்டிருந்தார். உமையாள் அப்போதனைகளை கவனித்தாரோ இல்லையோ, அந்த சமுத்திரத்தில் உள்ள மீன் ஒன்று அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அந்த மீன் துள்ளி குதித்தது. சிவபெருமான் வா இங்கே இன்று அதட்டி அந்த மீனை அழைத்தார்.
நெடுஞ்சானாக ஒரு முனிவர் ரூபத்தில் காட்சியளித்தது அந்த மீன். ஓம் நமச்சிவாயா என்றுரைத்தது சிவனையும் உமையாளையும் வணங்கியது அந்த மீன்.
என் போதனைகள் அனைத்தையும் கேட்டாய் அல்லவா என்று கேட்டார் சிவபெருமான் அந்த முனிவரை பார்த்து.
தலைவணங்கி ஆம் என்றார் அந்த முனிவர்.
நீ மச்சேந்திரநாதன் என பெயர் பெற கடவாய்.... பூலோகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பாயாக என்று கூறி மறைந்தார் சிவபெருமான் உமையாளுடன்.
மச்சேந்திரர் புவியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றார். கோவையருகே சம்பல்பட்டி எனும் இடத்தில் அவர் உலாவும்பொழுது ஒரு பெண்மணி மச்சேந்திரரை பார்த்து வணங்கினாள்.
பெண்ணே உனக்கு குழந்தைப்பேறு இல்லை அப்படி தானே? என்றார் மச்சேந்திர முனி.
ஆமாம் அய்யனே என்று அதிசயத்துடன் முனிவரை பார்த்து தலைவணங்கினாள்.
இதோ இந்த திருநீரை பிடி இதை நெற்றியில் இட்டு, கொஞ்சம் பருகி உறங்கும் போது தலைமாட்டில் வைத்துக்கொள் என்று ஆசி கூறினார்.
பெற்றுக்கொண்ட பெண்மணி வீடுச் சென்று அனைவரிடமும் இச்செய்தியை கூறினாள்.
சித்து வேலையாக இருக்கும் இது. திருநீறில் குழந்தை எப்படி உருவாகும்? அது வெறும் சாம்பல். அதை தூக்கி எறி-என்று அறிவுரைத்தார்கள் அக்கம்பக்கத்தினரும் அவள் கணவரும்.
அவளும் அந்த விபூதியை எரியும் அடுப்பில் எறிந்தாள்.
ஒரு பத்தாண்டுகாலம் கழித்து மச்சேந்திர முனி மீண்டும் அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.
அந்த பெண்மணி முனிவரை வணங்கினாள். பெண்ணே உன் புத்திரன் எங்கே? என்று கேட்டார் முனிவர்.
அந்த பெண்மணியோ கூனிக்குறுகினாள்.
"எங்கே உன் புத்திரன்? என்றேன்" என்று அதட்டினார் மச்சேந்திரர்.
ஸ்வாமி..... தாங்கள் அளித்த விபூதியை அன்றே நான் அடுப்பில் போட்டுவிட்டேன்- என்றாள் அந்த பெண்மணி.
என்ன காரியம் செய்தாய்! அடுப்பில் போட்டாயா.... என்று கேட்ட மச்சமுனி ஞான திருஷ்டியால் மனதிற்குள் சில மந்திரங்கள் சொன்னார்.
ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்று எண்ணிய அந்த பெண்மணி "ஸ்வாமி என்னை மன்னியுங்கள். ஏதும் சாபம் விட்டுவிடாதீர்கள்" என்று மச்சேந்திரரிடம் கெஞ்சினாள். அவள் கணவரும் செய்தியறிந்து அங்கு வந்துவிட்டார்.
அதுவல்ல பெண்ணே அடுப்பு சாம்பலை கொட்டும் இடம் வீட்டின் பின்புறம் தானே உள்ளது? என்று கேட்டார்.
ஆம் என்று சொன்னவள் அந்த சாம்பல் மேட்டை காட்டினாள்.
மச்சேந்திர முனி அங்கு சென்று சுற்றும் முற்றும் பார்த்தார்.
அந்த விபூதி அங்குதான் போய் சேர்ந்திருக்கும் என்று தன் ஞான திருஷ்டியின் மூலம் அறிந்தார் மச்சேந்திரர்.
அந்த மேட்டின் அருகே சென்றார். "கோரக்கா துயில் கொண்டது போதும் எழுந்து வா இங்கே" - என்று கட்டளையிட்டார்.
ஒரு பத்துவயது பாலகன் பக்தி மனத்துடன் எழுந்து ஓடி வந்தான்.
ஸ்வாமி என்னை ஆசீர்வதியுங்கள் என்று முனிவரின் பாதங்களில் நமஸ்காரம் செய்தான் அந்த பாலகன்.
மச்சேந்திர முனி ஆசீர்வதித்தார். இனி இவர்கள் தான் உனக்கு அம்மை அப்பன் - என்று அந்த தம்பதிகளை கை- காட்டினார்.
ஆகட்டும் ஸ்வாமி என்ற பாலகனான கோரக்கர் அவர்கள் அருகே சென்றான். அம்மையே தாங்களே என் பெற்றோர். ஆனாலும் நான் தங்களுடன் வாழ காலம் ஒப்புக்கொள்ளாது. என்னை தாங்கள் உதாசீனப்படுத்தியதற்கான அல்ல. நான் தெய்வப் பணி ஆற்ற பிறந்தவன். ஆலயங்கள் அமைக்க வேண்டும். நான் ஸ்வாமியுடனேயே செல்கிறேன். நிறைய வேலைகள் உள்ளன என்று மச்சேந்திரருடன் புறப்பட்டான் பாலகன்.
தம்பதிகள் கலங்கினார்கள். தாங்கள் செய்த காரியத்தை நினைத்து வருந்தினார்கள். தெய்வக் குழந்தை ஆகையால் முனிவருடனே செல்லட்டும் என்று சம்மதித்தார்கள்.
மச்சேந்திரர், தம்பதிகளின் ஒப்புமையோடு கோரக்கரை அழைத்து கொண்டு புறப்பட்டார்.
அன்று முதல் கோரக்கர் மச்சேந்திரரின் சீடரானார். புவியின் பல்வேறு பகுதிகளுக்கு இருவரும் பயணித்தார்கள். வடநாடு தென்நாடு மற்றும் கடல் கடந்து இலங்கை மலாயா நாடுகள் மங்கோலியா சீனப் பகுதிகள் அனைத்து இடங்களிலும் ஞான மார்க்க சித்து வேலைகள், தாவரங்களின் மூலம் மருந்துகள் கண்டுபிடித்து நோய் தடுக்கும் முறைகளை ஆராய்ந்தார்கள். அனைத்து ஞானங்களையும் கோரக்கர் மச்சேந்திரரிடமிருந்து கற்றுக்கொண்டார். பல நாட்கள் தியானம் செய்வதன் மூலம் இறைவனை காணலாம் என்பதை உணர்ந்தார். பஞ்ச மூர்த்திகளும் கோரக்கரின் கண்முன் தோன்றி ஆத்மார்த்த அருள் தந்தார்கள். கோரக்கரின் ஞானக்கண் விருக்ஷமானது. சித்து வித்தைகள் கூடுவிட்டு கூடு பாய்தல் போன்ற அமானுஷ்ய சக்தியை பெற்றார் கோரக்கர்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தோன்றும் ஆபூர்வ ஆற்றல் பெற்றார் கோரக்கர். சிவனின் கட்டளை நிறைவேறியது என்பதை உணர்ந்த மச்சேந்திரர் விடைபெற்றார்.
கோரக்கர் அடுத்தடுத்து அகத்தியர் போகர் போன்ற பல சித்தர்களின் கூட்டுமுயற்சியுடன் காயகல்பம் கண்டறியும் முயற்சியில் இறங்கினார். சிவபெருமானின் அருள் ஒன்றையே பலமாக பெற்றிருந்தார். போகரின் பெரும் கருணை கோரக்கரை ஈர்த்தது. பஞ்சமூர்த்திகளில் முருகப்பெருமானுக்கு பழனியில் சிலைவடிவம் வைக்க போகரின் உதவியை நாடினார். நவபாஷானம் செய்யும் முறையை போகரிடம் தான் கோரக்கர் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
நவபாஷாணம் கொண்டு போகரின் துணைகொண்டு அச்சிலையை வடிவமைக்கிறார் கோரக்கர். போகர் முக்தி பெற்ற நேரத்தில் அங்கேயே ஸ்தூபி அமைக்கிறார் கோரக்கர்.
வட நாட்டில், இமையமலைகளின் பல பகுதிகளில் கோரக்கரின் பாதம் பட்டிருப்பதாக வரலாறு கூறுகிறது. தென்னகத்தில் கொல்லிமலை வெள்ளியங்கிரி குடகுமலைபகுதி சதுரகிரி நாகைக்கு அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லார், பேரூர் திருச்செந்தூர் திரிகோணமலை பகுதிகளில் வாசம் செய்து ஆங்காங்கு பல நூல்களை எழுதியுள்ளார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்ற ஓரிரு சித்தர்களுள் கோரக்கரே முதன்மையானவர் என்று கூறப்படுகிறது.
அவர் தங்கியிருந்த அனைத்து இடங்களிலும் கோரக்கர் பெயரில் மடங்களும் கோவில்களும் அமையப்பெற்றிருந்தாலும் இறுதி காலத்தில் அவர் தன் சந்திரரேகை எனும் நூலில் குறிப்பிட்டதை போல் நாகப்பட்டினத்திற்கு தெற்கே மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வடக்குப்பொய்கைநல்லூரில் தான் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.
இன்றும் அந்த ஜீவசமாதி பீடம் பொலிவுடன் காணப்படுகிறது. பீடத்தை சுற்றி வளாகம் அமைத்து ஆஷ்ரமமாக அமைத்து அக்கறை செலுத்தி அவ்வூர் மக்கள் கோரக்கரின் சமாதி பீடத்தை பராமரித்து வருகிறார்கள். கி.பி.1233 ஆம் ஆண்டில் பீடத்துடன் கூடிய இந்த ஆஷ்ரமம் அமைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கோரக்கர் அருளிய சந்திரரேகை நூலில் குறிப்பிட்டிருப்பதை பார்க்கும்பொழுது அதற்கும் முன்பே இந்த ஆஷ்ரமம் அமைந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஊரில் மாதந்தோறும் பெளர்ணமி திதியில் கோரக்கருக்கு விசேஷ ஆராதனை நடைபெறுகிறது. வியாழக்கிழமை போற்றுதலுக்குரிய நாளாக கருதப்படுகிறது.
எட்டு திக்கிலிருந்தும் பக்தர்கள் வடக்குப் பொய்கை நல்லூரில் உள்ள சித்தாஷ்ரமத்திற்கு வந்து தங்கி கோரக்கரை வணங்கி அருள்பெறுகிறார்கள்.
வருடம் தோறும் ஐப்பசி மாத பரணி நட்சத்திரத்தில் கோரக்கருக்கு பிரமாண்ட விழா நடத்துகிறார்கள். இந்த ஆஷ்ரமத்தில் சித்தரின் பாதச்சுவடுகள் வெங்கல உலோகத்தால் அமைக்கப்பட்டு அதுவே மூலவிக்ரமாக இருக்கிறது. நன்கொடையாளர்கள் உதவியுடன் தங்கமுலாம் பூசப்பட்ட மேற்கூறை தியான மண்டபம் தினந்தோறும் அன்னதானம் போன்ற மகத்தான நற்காரியங்கள் நடைபெறுகிறது இவ்வாஷ்ரமத்தில்.
ஆதரவற்ற நிலையில் சாது யோகம் பெற்றவர்களும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களும் உணவு உறைவிடம் வேண்டி வருபவர்களும் இந்த ஆஷ்ரமத்தில் தங்கலாம். மூன்று வேளையும் இங்கு உணவு உண்டு. இரவு வேளைக்கு அன்னக்காவடி இந்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று உணவு வாங்கி அது கோரக்கருக்க படைத்து புனிதம் பெற்று அந்த உணவு அனைவருக்கும் பரிமாறப்படுவது அத்தனை சிறப்புவாய்ந்ததாக உள்ளது.
கோரக்கரின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும் என்று வேண்டி பிறகொரு சமயத்தில் மற்றொரு வீடியோவில் சந்திப்போம்.
- வை. மகேந்திரன்
Comments
Post a Comment