சிக்கல் சிங்காரவேலவர் கோவில்
சிக்கல் திருக்கோவில்
(வை. மகேந்திரன்)
நாகையில் உள்ள மிக பிரசித்திப் பெற்ற
புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று சிக்கல்.
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் தான் சிக்கல். அங்கே தான் வீற்றிருக்கிறார் சிங்கார வேலர் என்ற பெயரில் முருகப்பெருமான்.
இந்த ஊரில் குடிகொண்டிருக்கும் சிங்கார வேலர் பெருமான் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பதால் தான் இந்த ஊருக்கு சிக்கல் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கி.பி நான்காம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்காலத்தில் வாழ்ந்த கோட்செங்கன் சோழன் இந்த கோவிலை கட்டினார்.
அக்காலத்தில் காராம்பசு ஒன்று பால் பொழிந்து கொண்டே இருந்ததாம் இந்த ஊரில். அந்த பாலில் இருந்து திரட்டப்படும் நெய் ஒன்று மட்டுமே அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறார்கள். இன்றும் நெய் அபிஷேகம் செய்யும்பொழுதே இந்த கோவிலின் பிரகாரம் முழுக்க நெய் வாசனையால் மணக்கும் என கூறப்படுகிறது.
விசேஷ காலங்களில் முருகனின் முகம் ஆறு வித உணர்வுகளை வெளிப்படுத்தும் என்று கூறுகிறார்கள். சாந்தம் கோபம் நெகிழ்ச்சி மகிழ்ச்சி வீரம் பாசம் ஆகிய ஆறு ரூபங்களில் ஒரே விக்ரஹம் காட்சி தருவது இத்திருக்கோவிலில் உள்ள சிறப்பு.
ஆறுமுகப்பெருமான் என்ற நாமத்தில் இங்கு முருகனுக்கு தனி சன்னிதி இருந்தாலும், சிங்காரவேலரே உற்சவ மூர்த்தியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்திருக்கோவிலில் மூலவராக நவநீதேஸ்வரர் வீற்றிருக்கிறார். ஸ்ரீ நடராஜபெருமான் குருபகவான் சனிபகவானுக்கென்று தனித்தனி சந்நிதிகள் உண்டு. கலைமகள் தாயாரும் தனி சந்நிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
திருக்கோவிலில் வேல் நெடுங்கண்ணி என்ற நாமத்தில் உமையாள் அமர்ந்து முருகனுக்கு பாதுகாவலாக இருப்பதுடன் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார். சிங்காரவேலரை வணங்கும் முன் தாயார் வேல் நெடுங்கண்ணியை வணங்குவது சிறப்பு என்கிறார்கள். மனக்குறை அனைத்தையும் தீர்க்க வல்லவர் தாயார் வேல்நெடுக்கண்ணி.
தாயார் சந்நிதிக்கும் சிங்காரவேலவர் சந்நிதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் சுந்தரவிநாயகர் என்ற நாமத்தில் கணபதி பெருமான் தனி சந்நிதியில் வீற்றிருப்பது ஆலயத்தின் பெருஞ்சிறப்பு.
அழகு என்ற வார்த்தையே ஆலயத்தை அலங்கரித்து உள்ளது என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.
சிங்காரம் என்றால் அழகு. முருகப்பெருமான் இங்கு சிங்காரவேலவர் என்று அழைக்கப்படுகிறார்.
சுந்தரம் என்றாலும் அழகு. விநாயகப்பெருமான் சுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்திருக்கோவிலுக்கும் இடப்புறம் அமைந்துள்ள ஸ்ரீபெருமாள் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் விஷ்ணு பெருமான் கோலவாமன பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
கோல வாமனம் என்றாலும் அழகு என்று தான் பொருள் என்கிறார்கள்.
மால் மருகன் முருகன் அனுமன் அனைவரும் ஒரே கோவில் பிரகாரத்தில் அமர்ந்து அருள்பாலிப்பது இந்த ஊரின் சிறப்பு.
இடப்புறம் அமைக்கப்பட்டுள்ள கோல வாமன பெருமாள் கோவிலும் பொலிவுடன் திகழ்கிறது. அக்கோவில் மூலச்சந்நிதியில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார் பெருமான்.
தாயார் சந்நிதி மூலவருக்கு பின்புறம் உள்ளது. அனுமன் கோவிலின் வாயு மூலையில் அமர்ந்து அருள்பாலிப்பது சிறப்பு.
இங்குள்ள நவகிரஹங்களுக்கு தீபம் இட்டால் மனக்கவலைகள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள்.
சிக்கல் சிங்காரவேலவர் நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிக்கல்களை தீர்த்து சிங்கார வாழ்க்கை பெற வைக்கிறார்- எனக் கூறி மற்றொரு ஆலயத்தில் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது
வை மகேந்திரன்
Watch video on YouTube
https://youtu.be/kC_Z_EHis54?si=QlmVN826WmcFT5Cu
Comments
Post a Comment